இலங்கையை தாக்கிய டிட்வா புயலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இயற்கை பேரனர்த்தம் என்பது மனித கட்டுப்பாடுகளை மீறி ஏற்படும் ஒரு நிகழ்வு என நாம் அனைவரும் அறிந்துள்ள நிலையிலும் அதற்கான முன்னெச்சரிக்கைகளையும் ஒருங்கிணைப்புக்களையும் மேற்கொள்வதில் அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்நிலையில், அரசாங்கத்தின் சார்பாக பல கருத்துக்களையும் சிலர் முன்வைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
லா நினா (LA Nina)
இதற்கிடையில், கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, திடீரென ஏற்பட்ட அனர்த்தத்தினால் அதிகாரிகள் நீர்மட்ட உயர்வை கணிப்பதில் தடுமாறியுள்ளார்கள்.
2025 ஆம் ஆண்டு ஒரு லா நினா (LA Nina) வருடமாகும், அதாவது, அத்லாந்திக் சமுத்திரத்தில் இருந்து வெப்ப காற்றானது ஆசியாவை நோக்கி வீசுவது லா நினா என்று அழைக்கப்படுகின்றது.
எனவே, வடக்கு – கிழக்கில் வறட்சி ஏற்படும் என்று நீர்ப்பாசன துறை பொறியியலாளர் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் அதன் காரணமாக தான் அவர்கள் தேக்கங்களில் நீரை குறைக்கவில்லை என்ற நியாயம் முன்வைக்கப்படுகின்றது.
இதற்கிடையில், உடவலவ நீர்த்தேக்கத்திற்கு குறித்த நீரை கொண்டு செல்ல வேண்டும், இதனால் நீர் மின்சாரம் பாதிக்கப்பட கூடும் என்ற கரிசணைகள் இருந்துள்ளன என்று அமிர்தலிங்கம் கூறுகின்றார்.
காலநிலை வரலாறு
அதேவேளை, காலநிலை வரலாற்றின் படி, வழமையாக தாழமுக்கங்கள், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு கிழக்கு மாகாணம் நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு வழியாக கடக்கும்.
ஆனால், இலங்கை காலநிலை வரலாற்றில் முதன் முறையாக தாழமுக்கங்கள், வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற ஒரு தாழமுக்கமானது, மத்திய மலைநாடு வழியாக ஊடுருவியுள்ளது.
இது உண்மையில், எவருமே எதிர்பாராத திடீரென ஏற்பட்ட மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட உயர்வு தான் இத்தகைய பேரனர்த்தத்திற்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு இது குறித்து முன்னதாகவே எச்சரிக்கை விடுக்காமை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில் குறுகிய காலத்திற்குள் அதிகாரிகள் இணைந்து செயற்பட முன்வரவில்லை என அமிர்தலிங்கம் குறிப்பிடுகின்றார். எனவே, இதன் காரணமாக தான் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலோட்ட எச்சரிக்கைகள்
அதேவேளை, மக்களுக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த எச்சரிக்கைகள் (Generic warning), ஒரு மேலோட்டமான எச்சரிக்கைகளே தவிர நடக்கவிருந்த ஆபத்தை வலியுறுத்தும் வகையில் இருக்கவில்லை எனலாம்.
மேலும், தொடர்ந்து ஊடகங்களிலும் Breaking news என அடிக்கடி வெளியிடப்பட்ட செய்திகள் மக்களுக்கு சலிப்பூட்டியிருக்கலாம் எனவும் இதுவும் பொதுமக்கள் இவ்வனர்த்தம் குறித்து அவதானமாக இருக்காமைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது அதிகாரிகளிடம் இருந்தோ துல்லியமான எச்சரிக்கைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவே தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொதுவாகவே மத்திய மலைநாட்டில் 100 மில்லிமீற்றர் மழை பெய்வது என்பது சாதாரணமானது என்றாலும் கூட வடக்கு – கிழக்கில் அவ்வாறு பெய்வது சாதாரணமானது அல்ல.
இந்நிலையில், குறித்த மழைவீழ்ச்சியின் தாக்கமானது, மலைநாட்டில் வேறு வகையான தாக்கத்தையும் வடக்கு – கிழக்கில் வேறு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதே நிதர்சனம்.
இவ்வாறான சூழ்நிலையில், நீர்மட்ட உயர்வு குறித்து துல்லியமான அளவினை கண்டறிவதில் அதிகாரிகள் எதிர்கொண்ட சிரமமும் இயற்கையையும் தாண்டி மனித தவறுகளும் இந்த பேரனர்த்தத்திற்கு ஒரு காரணம் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.








































